மன அழுத்தம் - Depression
மன அழுத்தம் (Depression) ஒரு நோய். இன்றைய காலகட்டத்தில், நாளிதழ்களில் அதைப் பற்றிய செய்திகள் நிரம்பி வழிகின்றன. மன அழுத்தம் என்றால் என்ன? யாரெல்லாம் அதன் பாதிப்புக்கு உள்ளாகக் கூடும்? அதற்கான சிகிச்சை முறை என்ன? பற்றி இங்கே விளக்கப்பட்டுள்ளன.
முரண்கள் நிறைந்த வாழ்வு விந்தையானது மட்டுமல்ல; சவால்கள் நிறைந்ததும்கூட. ஆசை நிராசையாவதும் உறவு பிரிவதும் வாழ்வில் வாடிக்கை. சமநிலையில் இருக்கும் மனத்துக்கும் அது தெரியும். இருப்பினும், உண்மையை எதிர்கொள்ளும்போது, வாழ்வின் ஏமாற்றத்தையும் பிரிவின் துயரையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் மனித மனம் தடுமாறும்; தடம் மாறும். பின் சில நிமிடங்களிலோ சில மணி நேரத்திலோ சில நாட்களிலோ மனம் தன் இயல்புக்குத் திரும்பும்.
ஏமாற்றங்களும் பிரிவுகளும் இழப்புகளும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு ஆழமானதாக இருந்தால், மனம் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல், சோகத்தில் தேங்கிவிடும். இந்தத் தேக்க நிலை, அதாவது நிஜத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனத்தின் போராட்டம் மன அழுத்தத்தின் ஒருவகை என்றால், மூளையில் சுரக்கும் வேதிப்பொருட்களின் குறைபாட்டால் ஏற்படும் மன அழுத்தம் மற்றொரு வகை ஆகும்.
மன அழுத்தம் என்றவுடன், அதனால் பாதிக்கப்படவர்கள் சோகமாக வலம் வருவார்கள் என்றோ எந்நேரமும் அழுவதற்குத் தயாராக இருப்பார்கள் என்றோ எண்ண வேண்டாம். வாழ்வின் முக்கிய நிகழ்வுகளின் மீதான ஈடுபாட்டுக் குறைவே மன அழுத்தம். மன அழுத்தத்துக்கு உள்ளானவர்கள் அதிகமாகவோ குறைவாகவோ சாப்பிடுவார்கள்; தூங்குவார்கள்; சுற்றத்தை விட்டு விலகுவார்கள்; நட்பைத் தவிர்த்துத் தனிமையை விரும்புவார்கள்; வழக்கமான செயல்களில் நாட்டமின்றி இருப்பார்கள்.
ஒரு செயலைச் செய்வதற்கான ஆற்றல் குறைந்தவர்களாகவோ ஆற்றல் இல்லாதவர்களாகவோ இருப்பார்கள். வழக்கத்துக்கு மாறாக அதீத மறதியுடன் ஒருவிதக் குழப்ப மனநிலையில் இருப்பார்கள். கோபமும் வருத்தமும் பயமும் மிகுந்து ஒருவித விளிம்பு நிலையில் / உணர்ச்சிகள் வெடித்துவிடும் நிலையில் அவர்கள் இருப்பார்கள். தனக்கோ பிறருக்கோ தீங்கு விளைவிக்கும் எண்ணமும் அவர்களிடம் இருக்கும். நீண்டகால நோய்கள், பதற்றம், எண்ணச் சுழல் நிர்ப்பந்த நோய், மனச்சிதைவு போன்ற உடல்நலப் பிரச்சினைகளோடு மனஅழுத்தத்துக்குத் தொடர்புண்டு. இது வழக்கமாக இரண்டாண்டுகளோ அதற்கு மேற்பட்ட ஆண்டுகளோ நீடிக்கலாம்.
மன அழுத்த பாதிப்புக்கு உள்ளானவர்கள்
- முன்னர் செய்திகளில் அதிகமாக இடம்பெறாமல் இருந்த இந்த மன அழுத்தம், கடந்த பத்தாண்டுகளில் அபரிமிதமான அளவில் அதிகரித்துள்ளது. 30 கோடிக்கும் அதிகமான மக்கள், அதாவது உலக மக்கள்தொகையில் சுமார் 4 சதவீதத்தினர் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு (WHO) 2015–ல் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிகின்றன. மன அழுத்தத்தால் ஆண்களைவிடப் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
- உலக அளவில், மனிதர்களிடமுள்ள குறைபாட்டில் மன அழுத்தமே முதலிடத்தில் உள்ளது. முன்கூட்டிய மரணத்துக்கான காரணங்களில் பத்தாவது இடத்தில் மன அழுத்தம் உள்ளது. 15 வயதுக்கும் 29 வயதுக்கும் உட்பட்டவர்களின் மரணத்துக்கு இரண்டாவது முக்கியக் காரணம் தற்கொலை. தற்கொலைக்கும் மன அழுத்தத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உலகில் ஒரு நிமிடத்துக்கு இருவர் இதனால் உயிர் இழப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
- மன அழுத்தத்தைப் பொறுத்தவரை, உலகில் அமெரிக்காவே அதிக மன அழுத்தமுள்ள மனிதர்களைக் கொண்ட நாடாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக கொலம்பியா, உக்ரைன், நெதர்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன. ஜப்பான், நைஜீரியா, சீனா ஆகிய நாடுகளில் மனஅழுத்த பாதிப்பு குறைந்த அளவில் உள்ளது.
வேறுபாடுகள்
- கீழை நாடுகளில் குறைவாகவும் மேலை நாடுகளிலும் அதிகமாகவும் மன அழுத்தத்தின் தாக்கம் இருப்பதால், அது மேலைநாடுகளின் பிரச்சினை என்றோ ஆடம்பரத்தின் வெளிப்பாடு என்றோ சிலரால் கருதப்படுகிறது. துப்பாக்கி முனையில் நிறுத்தப்படும்போதோ அடுத்தவேளை உணவுக்கே வழியில்லாத போதோ மன அழுத்த்தைப் பற்றியெல்லாம் சிந்திக்க நேரமிருக்காது என்பது இந்த வாதத்தின் சாரம்.
- ஆனால், உண்மை அதுவல்ல. பணக்காரருக்கு மன அழுத்தம் இருக்கும், ஏழைக்கு மன அழுத்தம் இருக்காது என்ற கூற்றைவிடப் புள்ளிவிவரங்கள் மிக எளிமையாக உள்ளன. பெரும்பாலான நாடுகளில் மன அழுத்தம் ஒரே அளவில்தான் உள்ளது என மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கிழக்கு ஐரோப்பிய நாடுகள், வடக்கு ஆப்பிரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் போன்றவற்றில் இந்தப் பாதிப்பு மிக அதிக அளவில் உள்ளதாக அந்த முடிவுகள் அறுதியிட்டுக் கூறுகின்றன. மேலும், மன அழுத்தத்தின் பாதிப்பு ஆப்கானிஸ்தானில் மிக அதிகமாகவும் ஜப்பானில் மிகக் குறைவாகவும் இருப்பதாக அவை தெரிவிக்கின்றன.
- வளர்ச்சியடையாத நாடுகளில், மன அழுத்தம் குறித்த தரவுகளைச் சேகரிக்கும் கட்டமைப்பு இருப்பதில்லை. அங்கு வாழும் மக்களுக்கு மன அழுத்தத்தை ஒரு குறைபாடாகக் கருதும் மனமுதிர்ச்சி இருப்பதில்லை. தங்கள் உணர்வுகளையும் எண்ண ஓட்டங்களையும் வெளிப்படையாகப் பேசினால், சமூகத்தில் தங்களுக்குக் களங்கம் ஏற்படும் என்று அஞ்சி, வெளியில் உதவி பெறத் தயங்கி, அவர்கள் தங்கள் குறைபாட்டைத் தங்களுக்குள்ளேயே புதைத்துக்கொள்பவர்களாக உள்ளனர். இவற்றின் காரணமாகவே, வளர்ச்சியடையாத நாடுகளில், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவாக இருப்பது போன்ற தோற்றம் உள்ளது.
மன அழுத்தக் காரணிகள்
மனநோயால் பாதிக்கப்பட்டவர்களைப் பேய் பிடித்துள்ளது என்று கருதி சமூகத்திலிருந்து விலக்கிவைப்பதோ மந்திரவாதிகள் எனக் கருதி தூக்கிலிடுவதோ முன்பு வாடிக்கையாக இருந்தது. அந்தக் காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இன்று மனநோய் குறித்த விழிப்புணர்வில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும், மன அழுத்தத்தால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் இன்றும் தவறாகவே புரிந்துகொள்ளப்படுகிறார்கள்.
நேர்மறை எண்ணங்களை வளர்த்தெடுத்து சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருக்குமாறு அவர்களுக்கு எளிதில் அறிவுரை வழங்கப்படுகிறது. அவர்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்ற முனைப்பில் அவர்களிடம் அதிக வேலைகள் சுமத்தப்படுகின்றன. ஆனால், மனநல மருத்துவர் டிம் காண்டோபெர், இதற்கு நேரெதிராக மன அழுத்தத்தை ‘வலுவானவர்களின் சாபம்’ என்று சொல்கிறார்.
அவரது கூற்றுப்படி, மூளையில் இருக்கும் லிம்பிக் அமைப்பு நமது உடலின் செயல்பாடுகளையும் மனநிலையையும் கட்டுப்படுத்துகிறது. வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளுக்குப் பின் நமது மனநிலையை இந்த அமைப்பே சமன்படுத்துகிறது. நரம்புகளாலான லிம்பிக் அமைப்பில் செரடோனின், நொராடிரினலின் என்ற இரண்டு ரசாயனங்கள் தகவல்களைப் பரிமாறும் வேலையைச் செய்கின்றன. மன அழுத்தத்துக்கு உள்ளானவர்களுக்கு இந்த ரசாயனங்களின் சுரப்பு குறைவாக இருக்கும். இதன்படி பார்த்தால், மன அழுத்தம் என்பது மனநோய் அல்ல; அது உடலின் நோய்.
‘பூஞ்சை மனம் கொண்டவர்கள், மன அழுத்தத்துக்கு உள்ளாகும்போது எளிதில் உடைந்து மனச்சோர்வில் வீழ்ந்து விடுகிறார்கள். உறுதியான மனம் கொண்டவர்கள், தங்கள் முயற்சிகளின் அளவை இரண்டு மடங்காக்கி, லிம்பிக் அமைப்பு முற்றிலும் குலையும்வரை, வீழாமல், மன அழுத்தத்தில் இருந்து வெளிவர முயல்கிறார்கள்’ என்று காண்டோபெர் கூறுகிறார். ஆனால், இந்தக் கூற்று அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.
நிதி நெருக்கடி, தனிப்பட்ட இழப்புகள், உறவுகளின் பிரிவுகள், நீண்ட நாள் நோய், தாங்க முடியாத வலி, போதைப் பொருட்களின் பயன்பாடு, கடந்த கால அதிர்ச்சிகள், அவமானங்கள் போன்றவற்றால் மன அழுத்தம் ஏற்படக்கூடும் என்பதை மருத்துவ உலகம் இன்று ஏற்றுக்கொண்டு உள்ளது. மேலும், அதீத மன அழுத்தமோ சிலவகை நோயோ நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பைத் தேவைக்கு அதிகமாக இயங்கவைக்கும். இதன் காரணமாக மூளையில் வீக்கமும் அதன் காரணமாக மன அழுத்தமும் ஏற்படும் என்று மருத்துவ அறிவியல் கூறுகிறது.
சிகிச்சைகள்
உடலின் ரசாயனக் குறைப்பாட்டால் நேரும் மன அழுத்தத்தைத் தீவிர மன அழுத்தம் என்றும், வாழ்வின் நிகழ்வுகளால் ஏற்படும் மன அழுத்தத்தை மிதமான மன அழுத்தம் என்றும் மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
‘தீவிர மன அழுத்தத்துக்கு, இருவகை அழுத்தம் குறைக்கும் (Anti depressant) மருந்துகள் உள்ளன. ஒருவகை மருந்து, நோயுற்றவரின் பரபரப்பைக் கட்டுப்படுத்தி அவரை அமைதிப்படுத்தும். இரண்டாவது வகை மருந்து, சோர்வையும் அசதியையும் நீக்கி சுறுசுறுப்பை அதிகரிக்கும். தற்கொலை எண்ணங்களோ முயற்சிகளோ அதிகமாக இருக்குமேயானால், அப்போது நோயுற்றவர்களை மருத்துவமனையில் சேர்த்துக் கண்காணிக்க வேண்டும். எவ்வளவு காலம் மருந்து உட்கொள்வது என்பதை மருத்துவரே தீர்மானிக்க முடியும்.
இந்த மருந்துகளால், நாக்கு உலர்தல், மலச்சிக்கல், பசியின்மை, அதிகப் பசி, லேசான மயக்கம், வயிற்றில் எரிச்சல், மாதவிலக்கு தள்ளிப்போகுதல், மாதவிலக்கில் அதீத / குறைவான ரத்தப்போக்கு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம்’ என அவர் கூறுகிறார். மேலும், தீவிர மனநோயால் பாதிக்கப்பட்டவருக்கு, ஆரம்ப கட்டங்களில் மன ஆலோசனை பயனளிக்காது. ஆனால், அவர்களை எப்படிக் கையாள்வது என்பது குறித்த ஆலோசனை, அவர்களின் குடும்பத்தினருக்குத் தேவை.
மன அழுத்தத்தின் அறிகுறிகள் கட்டுக்குள் வந்தபிறகே மன ஆலோசனை நோயாளிகளுக்கு கைகொடுக்கும் என்கிறார் அவர்.
மிதமான மன அழுத்தத்துக்கு மன ஆலோசனை மிகவும் முக்கியம். அதனால் ஏற்படும் உறக்கமின்மை, பதற்றம் ஆகிய இரண்டையும் குறைப்பதற்காக ஆரம்ப கட்டங்களில் மாத்திரைகள் தேவைப்படும். தூக்கம் இயல்பான நிலைக்குத் திரும்பிவிட்டால், மாத்திரைகளை நிறுத்திவிடலாம். ஆழ்நிலை உறக்க வைத்தியத்தில் செய்யும் கருத்தேற்றம், மிதமான மன அழுத்தத்துக்கு நல்ல பலன்களைத் தரும்.
மன அழுத்தத்தின் போக்குகள்
- மன அழுத்தத்துக்கு நிறைய சிகிச்சை முறைகள் உள்ளன. இருப்பினும், உலகில் மன அழுத்தம் குறைந்தபாடில்லை. மனிதர்களின் மீதான அதன் பிடி இறுகிக்கொண்டேயிருக்கிறது. 2015-க்குப் பிறகு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. 1945-க்குப் பிறகு பிறந்தவர்கள் 10 மடங்கு அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர். இருப்பினும், உலக அளவில் தற்கொலை விகிதம், 25 சதவீதம் குறைந்துள்ளது. 1990-ல் 1,00,000 பேருக்கு 14.55 என்ற நிலையிலிருந்த தற்கொலை விகிதம், 2016-ல் 1,00,000 பேருக்கு 11.16 ஆகக் குறைந்துள்ளது.
- மன அழுத்த நோய்க்கான சிகிச்சைக்குப் பின்னும் நோயாளிகள் முழுவதும் குணமடைவது இல்லை என்பதாலேயே இந்நோய் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மன அழுத்தமும் தனிமையும் இந்த நோயின் உயர்வுக்கான முக்கியக் காரணங்கள். 60- 74 வயதுடையவர்கள் மற்ற வயதினரைவிட மன அழுத்தத்தால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். உலகில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் இந்த நோய் அதிகரித்து வருகிறது.
- கடந்த 25 ஆண்டுகளில் புதிதாக எந்த அழுத்தம் குறைக்கும் மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், மன அழுத்தத்தைக் குணப்படுத்த மருந்துகளைத் தாண்டி சிந்திக்கும் நிலைக்கு மனநல மருத்துவர்கள் தள்ளப்படுகிறார்கள். கீட்டமைன், சைலோசைபின் போன்றவற்றைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் வருங்காலம் குறித்து நம்பிக்கை அளிப்பதாக உள்ளன. மரபணு மாறுபாடுகள் குறித்த சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகள், மன அழுத்தத்துக்கான புதிய தலைமுறை சிகிச்சைகள் குறித்து நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
- குறைவான நோய்த் தடுப்பாற்றலுக்கும், மனச்சோர்வு, மூளையில் வீக்கம் ஆகியவற்றுக்கும் இடையிலான தொடர்பைப் பற்றியுமான ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. இது சர்ச்சைக்குரிய ஆராய்ச்சியாக இருப்பினும், இதன்மூலம் புதியவகை சிகிச்சை முறைகள் உருவாக சாத்தியம் உள்ளது. மருந்துகளுக்கு மாற்றாக, உளவியலாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதன் அவசியத்தை இன்று பல நாடுகள் உணர்ந்துள்ளன.
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தாமாகவே முன்வந்து தமது பிரச்சினைகளை வெளிப்படையாகப் பேசி, உதவி கோரும் அளவுக்கு ஓர் ஆரோக்கியமான சமூகத்தை ஏற்படுத்தும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. இந்தப் பொறுப்பை நாம் உணர்ந்தால், மன அழுத்தத்தால் களையிழந்த வாழ்வுக்கு மீண்டும் உயிர்ப்பூட்ட நம்மால் முடியும்; நம்புவோம். வாழ்வுக்கு உயிர் கொடுப்போம்.

கருத்துகள் இல்லை: